காங்கிரசுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வளர முடியுமா?

காங்கிரசுக்கு மாற்றாக ஆம் ஆத்மி வளர முடியுமா?

இன்றைய தேதியில் இரண்டு மாநிலங்களில் ஆட்சி நடத்தும் ஒரே மாநிலக் கட்சி ஆம் ஆத்மி. சமீபத்தில் நடந்துமுடிந்த உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், கோவா, பஞ்சாப் ஆகிய மாநிலத் தேர்தல்களில் போட்டியிட்டதுடன் பஞ்சாப்பில் ஆட்சி அமைத்ததுடன் தேசிய அளவிலான கவனத்தை அக்கட்சி பெற்றுள்ளது.

காங்கிரஸ் கட்சி என்னதான் பரவலான அளவுக்கு தேசிய அளவிலான கட்சியாக இருந்தாலும் அது பெற்றுவரும் தொடர் தோல்விகள், அக்கட்சியின் எதிர்காலம் பற்றி தீவிரமாக சிந்திக்கவேண்டிய நிலையை ஏற்படுத்தி உள்ளன. இந்நிலையில் 2024 தேர்தலில் காங்கிரஸ் தலைமையில் வலுவான எதிர்க்கட்சிகள் கூட்டணி பாஜகவுக்கு எதிராக ஏற்படுமா என்ற சந்தேகம் உள்ளது. நாடு முழுக்க செல்வாக்கு உள்ள வலுவான எதிர்க்கட்சி என்ற ஒன்று இல்லாத வெற்றிடத்தை ஆம் ஆத்மி கட்சி நிரப்பிட முடியுமா? அக்கட்சியின் தலைமைக்கு இப்படி ஒரு பேராசை இருக்கத்தான் செய்கிறது. ஆனால் அது நடக்குமா?

அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான இக்கட்சி 2013 ஆம் ஆண்டு அன்னா ஹசாரே தலைமையிலான லோக்பால் சட்டத்துக்கான போராட்டத்தில் முளைத்து டெல்லியில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு அடுத்த இடத்தைப் பிடித்தது. காங்கிரஸ் ஆதரவுடன் ஆட்சிக்கும் வந்தது. எந்த கட்சி போனால் போகிறதென்று ஆம் ஆத்மிக்கு ஆதரவு கொடுத்ததோ, அக்கட்சி டெல்லி மாநிலத்தில் சுத்தமாக அதன் பின்னர் இல்லாமலே போய்விடும் அளவுக்கு ஆம் ஆத்மி அங்கே விஸ்வரூபம் எடுத்து வளர்ந்துவிட்டது.

ஆம் ஆத்மியை ஆரம்பத்திலிருந்தே காங்கிரஸ் கட்சி சந்தேகக் கண் கொண்டு பார்த்துவந்ததாலோ என்னவோ தான் அமைக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான கூட்டணிகளில் ஆம் ஆத்மியை சேர்க்க முயலவே இல்லை. ஆனால் வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் மோடியை எதிர்க்கவேண்டுமானால் நிச்சமாக ஒரு நாடு தழுவிய எதிர்க்கட்சிகள் அணியை அமைத்தே தீரவேண்டும் என்ற கட்டாயம் இருக்கிறது. அது எந்த அணியாக இருந்தாலும் அதில் ஆம் ஆத்மியை ஒதுக்கிவிட முடியாது என்ற நிலையை அது எட்டியுள்ளது. இப்போதைக்கு நீயும் நானும் சமம்தான். நீ ராஜஸ்தான், சதீஸ்கர் என இரண்டு மாநிலங்களில்தான் ஆட்சி செய்கிறாய். நானும் டெல்லி, பஞ்சாப் என இரண்டு மாநிலங்களில் ஆள்கிறேன் என ஆம்ஆத்மி காங்கிரஸைப் பார்த்துக் கேட்கக்கூடும். கெஜ்ரிவால் மோடியை எந்த அளவுக்கு சீண்டியிருக்கிறார் என்பதைப் பார்க்கும்போது, நிச்சயம் காங்கிரஸையும் அவர் இப்படிச் சீண்டக்கூடும்.

திரிணாமுல் காங்கிரஸ், டிஆர்எஸ், ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் போன்ற கட்சிகளும் இதுபோன்றதொரு அணியில் முக்கிய பங்கு வகிக்கும் வாய்ப்புக்காக காத்துள்ளன.

ஆனால் ஆம் ஆத்மி, தனிப்பட்ட முறையில் காங்கிரஸுக்கு மாற்றாக வளர்ந்து பாஜகவை எதிர்க்க முடியுமா?

ஆம் ஆத்மி தன்னை காங்கிரசுக்கும் பாஜகவுக்கு நடுவில் ஒரு நட்டநடு வலதுசாரியாக முன் வைத்துள்ளது. கொள்கைரீதியாக வலுவானதாகவும் நாடு முழுக்க(ஒரு சில மாநிலங்களைத் தவிர) ஈர்ப்புடையதாக இருக்கும் பாஜகவின் இந்துத்துவ சித்தாந்தத்தை எதிர்க்க வலுவான மாற்றுக் கொள்கை அதில் இல்லை. கொஞ்சம் அக்கட்சியை தண்ணீர் ஊற்றி ஷாம்பூ போட்டுக் குளிப்பாட்டினால் காவி நிறத்துக்கு அதுவும் மாறிவிடுமோ என்ற ஐயம் எழும் நிலையில்தான் அதுவும் நடந்துகொள்கிறது.

ஆனால் தன்னுடைய வலுவான, சிறப்பான மாநில நிர்வாகத்தின் அடையாளத்தை நாடு முழுக்க ஊழல் மலிந்த நிர்வாகங்களால் தவிக்கும் மாநிலங்களிடையே வெற்றிகரமாகக் கொண்டு செல்ல முடியும் என்று அக்கட்சி நினைக்கிறது. அதனால்தான் நேரடியாக மோடியை எதிர்த்து கெஜ்ரிவால் செய்துகொண்டிருந்த மோதல் அரசியலைக் கைவிட்டுவிட்டு ஒவ்வொரு மாநிலமாக உள்ளூர் அரசியலைக் கையில் எடுத்துள்ளது. எங்கெல்லாம் ஆளும் கட்சி வலுவிழந்து மத்தியில் ஆளும் பாஜக மீதும் எதிர்ப்புணர்வு உள்ளதோ அதுபோன்ற சூழல் ஆம் ஆத்மியின் வளர்ச்சிக்கு உதவும்.

கோவாவிலும் உத்தரகாண்டிலும் ஆம் ஆத்மி இந்த அணுகுமுறையைத் தான் கடைபிடித்தது. கோவாவில் 6.8 சதவீத வாக்குகளையும் இரண்டு எம்.எல்.ஏக்களையும் அது பெற்றது. ஆனால் உத்தரகாண்டில் அதனால் முடியவில்லை. மூன்று சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன. இத்தனைக்கு உத்தரகாண்டில் முதல்வர் வேட்பாளரையெல்லாம் அறிவித்து ‘பில்ட் அப்‘ காட்டி இருந்தது கட்சி.

நாடு தழுவிய அளவில் திரிணாமூல்காங்கிரஸ் உள்ளிட்ட காங்கிரஸ் அல்லாத கட்சிகளுடன் ஒரு தனி அணியை அமைத்து அதில் முக்கியக் கட்சியாக ஆம் ஆத்மி இடம்பெறவும் முடியும். இப்போதைக்கு அக்கட்சிக்கு இருக்கும் எதார்ததமான வாய்ப்பு இதுதான்.

மற்றபடிக்கு கட்சி ஆரம்பித்த அதே ஆண்டில் ஒரு மாநிலத்தில் ஆட்சி, அடுத்த பத்தாண்டுக்குள் இன்னொரு மாநிலத்தில் ஆட்சி என்ற வளர்ச்சி பிரமிக்க வைக்கும் வளர்ச்சியே. அத்துடன் அக்கட்சியின் அடையாளம் எந்த மொழி, இன, பிராந்திய அடையாளங்களுடன் குறுகியதாக இல்லாமல் இருப்பது பலம்.

ஆம் ஆத்மியிலும் கட்சிக்குள் உரசல்கள் இல்லாமல் இல்லை. கட்சி ஆரம்பித்த போதிருந்த பலர் இப்போது விலகிவிட்டனர். பஞ்சாப்பில் இப்போது முதல்வர் ஆகி இருக்கும் பகவத் மான், இரண்டு முறை அக்கட்சி சார்பாக எம்பி ஆனவர். இவருமே அரவிந்த் கெஜ்ரிவாலுடன் முரண்பட்ட சம்பவங்களும் உண்டு.ஆனால், ஒரு நகைச்சுவையாளராக மட்டுமே மாநிலம் முழுக்க பிரபலம் ஆனவர், அரசியலுக்கு வந்து முதலமைச்சர் பதவிக்கும் பத்தே ஆண்டுகளில் அமர முடிந்திருக்கிறது.

தன்னுடைய தேசியக் கனவை நிறைவேற்ற இதேபோல் பிற மாநிலங்களிலும் கெஜ்ரிவாலுக்கு பிரபலமான முகங்கள் தேவை. ஒவ்வொரு மாநிலத்துக்குமான பிரத்யேக திட்டங்களும்கூட. பார்க்கலாம்.

ஏப்ரல், 2022

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com